நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் வெகு காலமாக இருந்து வந்த குழப்பங்களைப் போக்கி, தூய செம்மொழி படைத்து, தமிழ் வரலாற்றையும் தமிழன் வரலாற்றையும் எடுத்துரைப்பதே இவ்வாய்வு நூலின் முக்கிய நோக்கமாகும். ஒலியாய்ப் பிறந்து, ஓவியமாய்மாரி வட்டெழுத்தாய் வளர்ந்து வந்தது நமது தாய் மொழி.

சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழ்ப்பிராமி வட்டெழுத்து தலை தூக்கியது. முக்கியக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தமிழ்ப்பிராமி வட்டெழுத்திலேயே பொறிக்கப்பட்டன. பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் உள்ள பெரும்நட்பை இணைக்கும் பாலமாகத் தமிழ் வட்டெழுத்து அமைந்திருந்தது. சோழன், பாண்டிய நாட்டை வென்றவுடன் தமிழ் வட்டெழுத்து வீழ்ச்சியுற்றது. பிற்கால வட்டெழுத்துச் சாசனங்களில் ந, ப, ம, ய, ல, வ போன்ற எழுத்துக்கள் ஒரே சாயலை, உருவத்தைக் கொண்டதாக இருந்தன. வட்டெழுத்து கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தமிழ் பிராமியிலிருந்து பிரிந்து தனித்தன்மை பெற்றுச் சிறப்படைந்தது.

தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் உள்ளன என்பது தொல்காப்பியரின் கூற்று. ஆனால் தமிழ் வட்டெழுத்தில் ”ஔ” நீங்கலாகப் பதினோரு உயிர் எழுத்து வடிவங்களே கிடைத்துள்ளன. சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும், தமிழ் வட்டெழுத்தில் ”ஐ” ”ஔ” என்னும் வடிவங்கள் இல்லை. 16 ஆம் நூற்றாண்டு வரை ”ஐ” ”ஔ” என்ற இரு எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”பண்டையத் தமிழ் எழுத்துக்கள்” என்ற புத்தகத்தில் தமிழ் வட்டெழுத்தை அட்டவணையிட்டுக் காட்டுகிறார் திரு. தி.நா. சுப்பிரமணியன் அவர்கள், அதில் ”ஐ” ”ஔ” என்ற எழுத்துகளின் வடிவங்கள் இடம் பெறவில்லை.

தமிழ் எழுத்தானது ஒலியில் தொடங்கி, சித்திரமாக மாறி, பல காலகட்டங்களில் உருக்கள் பலவாறு மாறுபட்டு, இறுதியில் வரி வடிவமாய்த் தம்மிடம் தவழும் நடைமுறைத் தமிழ் எழுத்துக்களில் சில மாற்றம் கண்டார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் தொடுத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்போரில் அவர் விட்டுச் சென்ற மொழி சீர் திருத்தப் போர்ப் பணியை நான் மேற்கொள்கிறேன். நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் தந்தைக்குப் பின் தனையனைய் அவர் விரும்பிய, ஆசைப்பட்ட தமிழ் எழுத்துச் சீர் திருத்தங்களை நான் மேற்கொள்கிறேன்.

ஒரு மொழியை மக்களும் குழந்தைகளும் சுலபமான முறையில், எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில், கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படிக் கற்றுக் கொடுக்க வேண்டுமாயின் மொழி சீரான முறையில், சரியான நெறியில், குழப்பங்களோ அல்லது அய்யங்களோ ஏற்படாத வகையில் அமைதல் வேண்டும். அவ்வாறு நம் மொழியைச் சீர்படுத்த எண்ணற்ற வல்லுநர்களும், இலக்கிய மேதைகளும், பேராசிரியர்களும், மொழியாளும் அரசுகளும் முன்வர வேண்டும். அத்தோடல்லாமல் தமிழ் மொழியைத் தாய் மொழியாய்க் கொண்ட ஒவ்வொருவரும் முனைய வேண்டும். அவர்கள் வரிசையில் நானும் ஒருவன். பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் கங்கை கொண்டான் என்பதைப் போல் அல்லாமல் தன்னை சென்னை கொண்டான் என்று சொல்லி மகிழ்ந்தார். மேலும் தமிழகத்தின் தலைமகன் என்பதைக் காட்டிலும் தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டேன் எனப் புன்னகைத்தார்.

இந்நூலின் வாயிலாக, பழமை வாய்ந்த நம் தாய்த்தமிழின் முழு வரலாற்றை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஆதியில் மனிதன் ஒலி எழுப்பித் தன் கருத்தை வெளிப்படுத்தினான். அடுத்தவன் அவ்வொலிக்கு உருவம் தீட்டி மகிழ்ந்தான். மற்றவன் எழுத்தையும் எண்ணையும் கணக்கிட முனைந்தான். பிறகு படிப்படியே பிராமி, திராவிடி, கரோஸ்டி, யவனானியா போன்ற எழுத்து முறைகளைக் கையாண்டான் அன்றைய மனிதன். பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர, வளர வட்டெழுத்துக்களும் கோலெழுத்துக்களும் உதயமாயின. ஒலைச்சுவடிகளும், செப்பேடுகளும், கல் வெட்டுக்களும், அவன் எழுதிய எழுத்துக்களை மட்டுமன்றி அவன் வரலாற்றையும் பறைசாற்றுகின்றன.

அடுத்து, அடுத்து மனிதனுக்கு உதயமான பகுத்தறிவுச் சிந்தனையாற்றலால் தான், நாம் இன்று இத்தேன் தமிழ் பேச முடிகிறது. இன்று நாம் பேசும் மொழியின் சிறப்புக் குறையாமல், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சில எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றினார். இதனால் தமிழ் எழுத்தின் வரிவடிவம் தான் மாறியுள்ளதே தவிர, எழுத்துக்கள் தன் சிறப்பையும் ஒலியாயும் இழக்கவில்லை. இவ்வரிவடிவ மாற்றத்தால் மிகச் சுலபமாக்க் குழப்பமின்றி ஒரு சிறிதும் அய்யமின்றிக் கற்க முடுகிறது. சிரமமின்றி வெகு விரைவில் எழுதவும் படிக்கவும் முடிகிறது. அச்சு, தட்டச்சுப் பணிகளில் ஏற்படும் சிக்கல்களையும் காலதாமதங்களையும் போக்கமுடிகிறது. எழுத்துக்களின் எண்ணிக்கை தமிழில் கூடுதலாக உள்ளதால் தமிழ் மொழியின் வளர்ச்சி குன்றி விடுகிறது. இருபத்து ஆறே (26) எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில மொழி உலகப் பொது மொழியாக ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் மொழியில் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பின்னும் பல சீர் செய்யப்பட வேண்டிய எழுத்துக்களும், நீக்கப்பட வேண்டிய எழுத்துக்களும் உள்ளதை நான் உணர்கிறேன். உயிர் நெடில்கள் ”ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ” போன்ற ஆறு எழுத்துக்களிலும் தந்தை பெரியாரின் ”எழுத்துவிதி” யைக் கையாள விரும்புகிறேன். மேலும் உயிர் எழுத்துக்களிலுள்ள ”ஐகார” ”ஔகார” எழுத்துக்களாகிய ”ஐ” ”ஔ” என்ற இரண்டு எழுத்துக்களின் வரி வடிவத்தை நீக்க முயல்கிறேன். பின் பகுதியில் தெளிவான விளக்கத்தைக் காணலாம். ஆய்த எழுத்து பாண்டிய, சேர நாட்டு, வட்டெழுத்துக்களில் இல்லை. ஆய்த எழுத்தாகிய அக் என்ற எழுத்தும் ஒரு பிரச்சனைக் குரியதே! அதாவது ”ஃ” என்ற உருவத்தைக் கொண்ட மூன்று முழு நிறுத்தல் குறிகள் எவ்வாறு ”அக்” என்ற ஒலியை எழுப்ப முடியும்? இதற்குத் தீர்வு காண வேண்டாமா?

உயிரைத் தாங்கி நிற்கும் உடலாக மெய்யெழுத்துக்கள் அமைந்துள்ளன. மாற்றமின்றித் தமிழ் மொழியின் சிறப்பைக் கட்டிக் காத்து வருகின்றன. ஆனால் தேவைக்கு மேல் மிதமிஞ்சிக் கிடக்கின்றதே. அவற்றை ஏன் குறைக்கக் கூடாது? பயப்படாமல் பல எழுத்துக்கள் சுமையாய் இருந்து வருகிறதே! அவைகள் தேவைதானா?

உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவைகள் பல உண்டு. இகர, ஈகார வர்க்க எழுத்துக்கள் ஒரு சீரான ஒழுங்குடன் அமையவில்லை. மேலும் ஔகார வர்க்கமும் தேவையற்ற ஒன்றாகவே புலப்படுகிறது. ”ஔ” என்ற வரிவடிவமோ அல்லது ஔகார வர்க்க எழுத்துக்களோ வட்டெழுத்துக்களில் காணப்படவில்லை. சேர நாட்டு வட்டெழுத்துக்களிலும் கூட இடம் பெறவில்லை. ”ஔ” என்ற வரிவடிவம் இல்லாமலேயே மற்ற எழுத்துக்களின் துணைக் கொண்டு ”அவ்” என்ற ஒலியை எழுப்ப முடியும். இதைப்பற்றி பின்பகுதிகளில் நல்ல விளக்கமும் சான்றுகளும் காணலாம். நானும் ஒரு தமிழன். என்னையும் தமிழ்த்தாய் ஒரு மகனாகப் படைத்துள்ளாள். தன் தாயைப் பேணிக்காப்பதும், தாயை அழகுபடுத்துவதும், சீர்காண்பதும் ஒரு மகனின் அவசியப் பணியல்லவா? அப்பணியை நான் மேற்கொள்கிறேன்.

மாற்று மொழிக் கலவைகளை அறவே நீக்க வேண்டும். கலவைகள் நீக்கப்பட்ட அசல் தமிழை ஆய்வு செய்து, சீர்கண்டு ஒழுங்கு படுத்த வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டு வருங்காலத்தமிழ் அச்சுமுறை, கையச்சுமுறை, சுருக்கெழுத்து முறை, கணிப்பொறி முறைகளுக்குப் பேருதவியாக மலரும். தமிழ்மொழி கற்போருக்கும், தமிழினக் குழந்தைகளுக்கும் முன்பிருந்ததை விட திருத்தப்பட்ட தமிழ் சுலபமான முறையாகப் பயன்படும் என நம்புகிறேன்.

உற்றுக் கவனித்தால் தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களில் ”ஐ” ”ஔ” என்ற இரு எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களா? இல்லை. தமிழ் எழுத்துக்களுள் புகுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட எழுத்துக்களே! ”ஃ” அக் என்ற ஒலியை எழுப்பும் இவ்வெழுத்து வடமொழியாகிய சமஸ்கிருதம் என்ற வடமொழியில் பயன்படுத்தப்பட்டது. ”ஐ” ”ஔ” இரண்டுமே பல்லவர்களின் ”பிராமலிபி” என்ற மொழியைச் சார்ந்தது. சோழர்களிடம் புகுத்தப்பட்டு, சோழன் மூலம் தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட எழுத்துக்கள். தமிழ் மொழிக் கலவையைப் போக்க வேண்டுமானால் இம்மூன்று எழுத்துக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். பின்வரும் பகுதியிலுள்ள நல்ல விளக்கங்களும், கால எழுத்து அட்டவணைகளும் இதை நன்கு புலப்படுத்தும்.

இந்நூலின் வாயிலாக, சில எழுத்துக்களைக் குறைத்தும், சுலபமான முறையில், எளிய நடையில் தமிழைக் கையாளலாம், பேசலாம், பயிலலாம் என்ற நற்கருத்தை வெளியிடுகிறேன். தேவையற்ற, பயன்படாத, மிதமிஞ்சி இருகின்ற எழுத்துக்களை நீக்கியுள்ளேன். அப்பன் கொட்டிய குப்பையை அப்புறப்படுத்த அல்லது துப்புறவுப்படுத்தவில்லையெனில் உறுதியாக துருநாற்றமும், நோய்க் கிருமிகளும் உருவாகும் என்பதில் ஒரு சிறிதும் அய்யமில்லை. அதைப் போலவே தமிழ் மொழியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையல் தேவையற்ற எழுத்துச் சுமைகள் உள்ளன. அவற்றைக் குறைத்து அல்லது நீக்கி எளிமையாக்கி, சுலப முறையைக் கையாளுவதில் தவறென்ன இருக்க முடியும்?

பிற மொழிகளாகிய ஆங்கிலமும், இந்தியும் வளர்ச்சியடைந்து, பாரெங்கும் பரந்து ஆக்கம் பெற்றுக் காணப்படுகிறது. ஆனால் தமிழ்மொழி வளர்ச்சியடையாமல் மந்த நிலையில் உள்ளதே, இதற்குக் காரணம் என்ன? என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். மிகக் குறைவான எண்ணிக்கையில் எழுத்துக்களை கொண்ட காரணத்தால் ஆங்கிலமும் இந்தியும் எளிதில் வளர முடிகிறது. அதிக எழுத்துக்களை, அதாவது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழி எளிதில் வளர இயலாமல் போகிறது. மேலும் தமிழ் பயில கடினமாக, பெரும் சுமையாக, மொழி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து வருகிறது. ஆகவே தந்தை பெரியாரின் ஆணையை ஏற்றுத் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களையும் எழுத்துக் குறைப்பையும் கையாளுகிறேன்.

எந்த ஒரு மொழிக்கும் அடித்தளமாக அமைவது அம்மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் செம்மையாக அமையப்பட வில்லையென்றால் மொழி சிறக்காது. மொழியென்னும் மாளிகைக்குள் நுழைய முதல்படியாக உதவுவது எழுத்துக்களே. நமது தமிழ்மொழியில் உயிராகக் காட்சியளிப்பது உயிர் எழுத்துக்கள். அவ் உயிரெழுத்துக்களில், குறில் மற்றும் குறில் சார்ந்த நெடில்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என அழகாக ஒலிக்கின்றன. மிக மிகச் சரியே. ஐ = அய்; ஔ = அவ் என்ற இரு நெடில்கள் மட்டும் எங்கிருந்து வந்தது? ஏன்வந்தது? எப்படி வந்தது? அப்படியானால் இதன் குறில் வரிவடிவம் என்ன? அவைகள் ஏன் எழுத்துப்பட்டியலில் இடம் பெறவில்லை? இவைகள் நெடில்களாக ஒலிக்கின்றதா? குறில் இல்லாது நெடில் என்று எவ்வாறு ஊர்சீதம் செய்யமுடியும்? இப்படி பல அய்யங்களும் குழப்பங்களும் வினாக்களும் உருவாகின்றன. ஆகவே ”ஐ” என்னும் அய்காரமும் ”ஔ” என்னும் அவ்காரமும் நீக்கப்படுகின்றன.

இதைக் போலவே உயிர் மெய்யெழுத்துக்களில் பல பயனற்ற எழுத்துக்கள் பெரும் சுமையாக இருந்து வருகின்றன. தமிழ் மொழி வழக்கில், எழுதப் படிக்கப் பயன்படாமலும், உபயோகிப்படுத்தப் படாமலும் இருந்து வரும் உயிர்மெய்களை நீக்கி எழுத்துக் குறைப்பைக் கையாளுகிறேன்.

”ங்”, ”ஞ்” என்னும் இரு மெய்களும், ஏதோ ஒரு சில இடங்களில் பயன்பட்டாலும் இதனுடன் புணரும் பல உயிர்மெய்கள் உபயோகமற்று, கையாளப் பயன்படாது வெட்டிச் சுமையாக உள்ளன. இவ்வுண்மையைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவோம். ஆனால் அவற்றை நீக்குவோம் என்ற துணிவு எவருக்கும் வரவில்லை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், 1935ம் ஆண்டிலேயே தட்டிக் கேட்டார்.

”ஓ தமிழே! உனக்கேன் 247 எழுத்துக்கள்?” என்று உணர்ச்சி பொங்கக் கூவி, வினாக் கணை தொடுத்தார். அவர் கேட்ட வினாவிற்கு இதுவரை எந்தத் தமிழனும், தமிழறிஞரும் பதில் கூறவில்லை. விடைகூற எவருக்கும் துணிவு வலவில்லை. காரணம் அறியாமையா? இல்லை இயலாமையா? எவரும் எப்படியும் போகட்டும். ஆனால் நான் தமிழன், நான் விடையளிக்கிறேன். அவரெண்ணத்தை, நோக்கத்தை, குறிக்கோளை நான் நிறைவேற்றுகிறேன்.

பயிர் வளர்க்கப்பட வேண்டுமானால், களைகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டுமேயானால் கண்டிப்பாக, களைகளைப் போலிருக்கும் தேவையற்ற, பயன்படாத, உபயோகமற்ற எழுத்துக்களை நீக்கியே ஆக வேண்டும். மேலும் சற்று உற்று நோக்குங்கள். தமிழ்மொழியில் மிதமிஞ்சிய எழுத்துக் குவியல்கள் உள்ளன. லகரத்தை எடுத்துக் கொண்டால் மூன்று உள்ளன. 3 X 12 = 36 லகர உயிர் மெய் வரிவடிவங்கள் உள்ளன. அத்தோடு மூன்று மெய்களாகிய ல், ள், ழ் இம் மூன்றையும் சேர்த்தால் மொத்தம் முப்பத்தி ஒன்பது லகர ஒலி மற்றும் வரி வடிவங்கள் தேவைதானா? ஆங்கிலத்தில் L என்ற ஒரு வரிவடிவமே அனைத்துத் தேவைகளையும் ஈடுசெய்கிறது. வடமொழியாகிய இந்தியை எடுத்துக் கொண்டால் ஒரு லகர ஒலி மற்றும் ஒரு லகர வரிவடிவை வைத்தே அனைத்து தேவைகளையும் மேவுகின்றனர். ஆனால் தமிழ்மொழியில் இத்தனை அதிக எண்ணிக்கையுடைய லகரம் தேவைதானா? என்று நீங்கள் அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள். வல்லினம், இடையினம், மெல்லினம் இப்படி எழுத்தினம் எதுவாக இருந்தால் என்ன? எழுத்துக்களின் இனம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமே. எவ்வினம் எளிதாக உள்ளதோ அதை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? எளிதாக புரியக்கூடிய, எளிதாக கையாளக்கூடிய, சுலபமாக எழுதப்படிக்கக் கூடிய, வகையில் அமையும் எவ்வின வெழுத்தையும் கையாளுவது நன்மை பயக்கும் என்பதே என் கருத்து. மித மிஞ்சி ஒலிக்கும் லகரங்களையும், லகர வரிவடிவங்களையும் நீக்குவதா? இல்லை ஊக்குவதா? (லகரம், ளகரம், ழகரம்) மூன்று லகரங்கள் தேவைக்கு மிஞ்சியவைகளே! இப்படி ஒரு சிந்தனை ஏன் எழக்கூடாது?

நகரவின எழுத்துக்களை உற்றுப்பாருங்கள். மூன்று (ந,ன.ண) நகர ஒலி வகைகளைக் காண்கிறோம், கேட்கிறோம். அவற்றை வரிவடிவில் நோக்கினால் 3 X 12 = 36 முப்பத்தி ஆறு வரிவடிவங்கள் உள்ளன. அத்தோடு நகர மெய்களாகிய ந், ன், ண் இம்மூன்றையும் சேர்த்தால் முப்பத்தி ஒன்பது (39) ஆக எண்ணிக்கை உயர்கிறது. மூன்று வித நகர வொலியோ அல்லது வரி வடிவோ தேவைதானா? என்பது தான் என் கேள்வி. இதில் ஒரு பன்னிரண்டு நகர ஒலியெழுத்துக்களை நீக்கினால் என்ன? சற்று எழுத்துச் சுமை குறையுமல்லவா!

ரகர ஒலியெழுத்துக்களிலும் இரு வகையான (ரகர றகர) ரகர ஒலி மற்றும் வரிவடிவங்கள் உள்ளன. 2 X 12 = 24 இருபத்தி நான்கோடு, ரகர மெய்களாகிய ர், ற் இவ்விரண்டையும் சேர்த்தால் இருபத்தி ஆறாகக் கூடுகிறது. ஏன்? ஒரு ரகர வகை போதாதா? ஒரு பதிமூன்று ரகர வரிவடிவங்களே போதும் என்பதே என் கருத்தும் ஆய்வும். ஆகவே ”ர” என்னும் ரகரத்தை பயன்படுத்திக் கொண்டு, ”ற” என்னும் றகரத்தை நீக்குகிறேன். முதல் எழுத்தாகப் பயன்படாத ”ற” றகரம் தேவை தானா?