21. எண்ணும் எழுத்தும் ஒரு பார்வை
பகுதி-I

உலகில் உயிர்வாழும் மக்களுக்கு இருகண்களாகப் பயன்படுவது எண்களும் எழுத்துக்களும் என்று ஆணித்தரமாக்க் கூறுகிறார் திருவள்ளுவர்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” -குறள் -392.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரு கண்கள் எவ்வாறு பயன்படுகிறதோ, அதைப் போலவே எண்களும் எழுத்துக்களும் பயன்படும், பயன்படுகிறது என வெகு அழகாக்க் கூறியுள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்.

அவ்வாறே, கொற்கை வேந்தன் வாயிலாக அவ்வய்யாரும் “எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்” என்று திருவள்ளுவரின் கருத்தைத் தழுவியே எண்களையும் எழுத்துக்களையும் இரு கண்கள் தான் என உறுதிப்பட கூறுகிறார். அவ்விரண்டையும் ஒழுங்காகப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

முந்தைய இயல்களில் தமிழ் மொழியின் எழுத்துக்களைப் பற்றி சில ஆராய்ந்து அறிந்தோம். இனி எண்களைப் பற்றியும் சற்று சிந்திப்போம். ஒலியை மட்டுமே தம் மொழியாக்க் கையாண்ட நம் முன்னோர்கள் அவ்வொலியை நிலையாக நிலைக்கச் செய்ய ஒருயுத்தியைக் கையாண்டார்கள். அதன் விளைவே “சித்திர எழுத்து” அல்லது “பட எழுத்து” முறை. இதனை “சித்திர சங்கேத குறிகள்” எனவும் அழைப்பர். சித்திரங்களை எழுத்துக்களாகப் பயன்படுத்தி கையாளத் தொடங்கிய காலத்திலேயே அச்சித்திரங்களை எண்களாகவும் பயன்படுத்தி வந்தனர். விண்ணையும் மண்ணையும் கணக்கிடத் தொடங்கினர். காலத்ததையு கணக்கிட்டு வந்தனர். எண்களைக் கணக்கிட்டு வரிவடிவம் அமைக்க நேர்கோடுகளையும் படுக்கைக் கோடுகளையும் கையாண்டுள்ளதை பெரும்பாலான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.

தளிசிவன் கோயில் செப்பேடுகள், (கொச்சி இராச்சியம்) இராச்சேகரன் செப்பேடுகள், பாசுகர ரவிவர்மா திருக்காக்கரை செப்பேடு, ராஜராஜசோழன் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் போன்ற ஏராளமான ஆதாரங்கள் உண்டு. கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் வெட்டப்பட்ட அந்த ஆண்டுகளும் எண்களும் எழுத்துக்களும் ஒரு நிலையில் சித்திரச்சங்கேதக் குறிகளால் கையாளப்பட்டுள்ளதை இனி நோக்குங்கள்.

உ.ம்.

ஒன்று – _______

இரண்டு – ________
_______

மூன்று – ——
——-
——-

மற்றுமோர் முறை

ஒன்று – I
இரண்டு – II
மூன்று – III

சிந்துச்சம வெளியில் திராவிடி என்னும் தமிழ் சித்திர எழுத்துக்கள் கையாளப்பட்டபோது எண்களின் தோற்றமும் உருவாகின. கல்வெட்டுக் காலங்களில் எவ்வாறு எழுத்துக்கள் வளர்ச்சியடைந்து நடுகற்களிலும், கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் இடம் பெற்றதோ அதைப் போலவே எண்களின் வளர்ச்சியும் மேலோங்கி இடம் பெற்றிருந்தன.

இவ்வாறாக பல காலகட்டங்களில் தமிழ் எண்களின் வரி வடிவங்களும் மாறுபட்டு எழுத்துக்களே எண்களாகவும் பயன்பட்டு வந்து இருக்கின்றன. அவைகளே எண்ணும் எழுத்துக்களுமாகும்.

பகுதி- 2

90 மற்றும் 900 – உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் பெரும் குழப்பம் முற்றும் முரண்பாடு உள்ளதாக நான் உணர்கிறேன்.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம். அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன. மகிழ்ச்சியே. 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 – பத்து
20 (இரு +பத்து) = இருபது, 30 (மூன்று + பத்து) = முப்பது,
40 (நான்கு + பத்து) = நாற்பது, 50 (ஐந்து + பத்து) = ஐம்பது,
60 (ஆறு +பத்து) = அறுபது, 70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது, 90 (ஒன்பது+பத்து) = தொண்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா.

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது. தொண்ணூறுடன் தொடர்புடைய 91,92,93,94,95,96,97,98,99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

எண் குறைபாடு ஒலிகள் சீர்திருத்த எண்ணொலிகள்
90 தொண்ணூறு தொண்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொண்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொண்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொண்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொண்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொண்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொண்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொண்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொண்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொண்பதி ஒன்பது
100 100 நூறு




900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு. இரு+நூறு=இருநூறு, மூன்று+ நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறான முறையே. தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைத்தல் சிறப்பு. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடு ஒலிகள் சீர்திருத்த ஒலிகள்
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொண்ணூற்றி ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து என்பது தொண்ணூற்றி என்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொண்பது
991 தொள்ளாயிரத்துதொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றிதொண்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்துதொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றிதொண்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்துதொண்ணூற்று மூன்று தொண்ணூற்றிதொண்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்துதொண்ணூற்று நான்கு தொண்ணூற்றிதொண்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்துதொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றிதொண்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்துதொண்ணூற்று ஆறு தொண்ணூற்றிதொண்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்துதொண்ணூற்று ஏழு தொண்ணூற்றிதொண்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்துதொண்ணூற்று எட்டு தொண்ணூற்றிதொண்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்துதொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றிதொண்பதின் ஒன்பது
1000 ஆயிரம் ஆயிரம்



எண் நடைமுறை சீர்திருத்த முறை
9 ஒன்பது(சரி) ஒன்பது (சரி)
90 தொண்ணூறு(தவறு) தொன்பது (சரி)
900 தொள்ளாயிரம்(தவறு) தொண்ணூறு
9000 ஒன்பதாயிரம்(சரி) ஒன்பதாயிரம்