கடைச்சங்கம் அல்லதுமூன்றாம் தமிழ்ச்சங்கம்
கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை

கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே. இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.

கடைச் சங்கத்தின் சிறப்புகள்

பழைய திருவிளையாற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. “மொழியறி சங்கப் பலகை” என்றும் “பாவறி சங்கப்பலகை என்றும்” இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.

கடைச்சங்கத்தின் அழிவு

சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.