நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும். நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!