பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவலகால வகையினானே என்பது நன்னூலாரின் கூற்று. அனைத்துமே மாறிவரும். மாறாதது எதுவுமே இல்லை. எல்லாமே மாறக்கூடியது தான். மனித வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள அனைத்து வளர்ச்சிக்கும், அனைத்து முன்னேற்றங்களுக்கும் வித்தாக நிற்பது மாற்றங்களே!

புதுமைகள், புது வளர்ச்சிகள், புது மாற்றங்கள் என்றாலே பழமையின் அழிவு, பழமையின் நீக்கம் என்று தான் பொருள், உலகில் நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் பல மாற்றங்களின் அடிப்படையில் உருவாகியவைகளே! ஆதியில் மனிதன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், எதிரியை அழிக்கவும் கூரிய கற்களைப் பயன்படுத்தினான். ஆனால் இன்று அமெரிக்கா தன்னைக் காத்துக் கொள்ளவும் எதிரியை அழிக்கவும் ஒழிக்கவும் பழைய கற்கால மனிதனைப் போல் கூரிய கற்களைப் பயன்படுத்தவில்லை. அதிநவீன ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். தொன்மையும் பழமையும் தான் தேவை என்று கருதி மடமையில் மாண்டு விடவில்லை அமெரிக்கர்கள். மாறாகப் பல மாற்றங்களை கையாண்டார்கள். பழமையை ஒரு பக்கமாக பகுத்திறவுச் சிந்தனைகளைத் தூண்டினர். அறிவியல் ஆற்றலைத தூண்டினர். புதுமைகள் பல படைத்தனர். வெற்றிகள் பல பெற்றனர். இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருப்பான்.

ஆனால் தமிழ்மொழியில் மட்டும் மாற்றம் வேண்டாம் என்று கூறும் மாமேதைகள் பலர் உள்ளனர். இவர்களை அறிவாற்றல் மிக்க பேரறிஞர்கள் என்பதா? இல்லை திறமையற்ற பிறமைகள் எனபதா? தன்னைப் பெற்று வளர்த்த தாயையும், தன் தாய்மொழியையும், தன் நாட்டையும், பேணாதவன் ஒருமனிதனா? என்று கேட்பதில் தவறிருக்க முடியாது. அவன் உறுதியாக ஒரு உணர்ச்சியற்ற, பற்றற்ற, கடமை உணர்வற்ற, உணர்வும், தாய் மொழிப்பற்றும் அற்ற ஒருவனை ஒரு தமிழன் என்று கூற நா கூசுகிறது இப்படிப்பட்ட பல பேடிகள், தன்னைத் தமிழென்றும், தமிழறிஞர் என்றும், தமிழ் மேதைகள் என்றும், தமிழின தலைவர்கள் என்று பொய் கூறி, மக்களை ஏமாற்றி, மக்களின் வரிப்பணத்தை ஊதியமாகப் பெற்று வாழ்கின்றனர் வெட்கமின்றி.

செந்தமிழே! நீ வாழ்க! தேன்தமிழே! நீ வளர்க! பைந்தமிழே! நீ வெல்க! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என் தாய்த் தமிழே! நீ வாழ்க! இப்படி பலவாறாக, விழா எழுப்பி, வெட்கமின்றி இடி முழக்கம் ஆற்றிய தொண்டுகள் என்ன? சேவைகள் என்ன? நான் ஒரு உண்மைத் தமிழன். கீழ் மட்டத்திலிருக்கும் ஓர் உழவன்தான்.. மேல் மட்டத்திலிருக்கும் உன்னைக் கேட்கிறேன். நீ தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் எவை? எவை?

சங்கங்களும் கழகங்களும்


ஒரு மொழியின் வாழ்வும் வளமும், அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரின் மொழிப்பற்றையும், அவர்கள் கொண்டுள்ள மொழியார்வத்தையும் பொருத்தே உள்ளது. முற்காலத் தமிழர்கள், தம் தாய்மொழி தமிழை வளர்க்க எத்தனை போரினைக் கண்டான். தமிழைத் தன் மூச்சாகக் கொண்டான். தமிழை ஆய்ந்தான். தமிழை வளர்த்தான். சங்க இலக்கியங்கள் பல படைத்து பாரெங்கும் புகழ் படைத்தான். அன்று முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இயங்கியதைப் போலவே இன்றும் நான்கு கழகங்கள் இயங்குகின்றனவே!

1. தமிழ்மொழி வளர்ச்சிக் கழகம்.
2. பிராந்திய மொழி மேம்பாட்டுக் கழகம்
3. தமிழ்ப் பல்கலைக்கழகங்கள்
4. தமிழ்ச் சங்கங்கள்.

இவைகளின் முக்கியப் பணிகள் என்ன? எதற்காக இவைகள் உருவாகின? இவைகள் தமிழ் மொழிக்காற்றிய பணிகள் எவை? எவை இவ்வியக்கங்களுக்கு செலவிட்ட மக்களின் வரிப்பணம் எத்தனை எத்தனை கோடி? இவ்வினாக்களுக்கு நேரடிப் பதில்கூற எவரேனும் முன்வர இயலுமா? இயலும் என்று எவரேனும் முன்வந்தால் வாருங்கள். மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

உங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இன்னும் பலப் பல உள்ளன. இயலும் என்று உரைக்க முனையும் அறிஞரே! வருக! வருக!! தமிழ் மொழியின் வரி வடிவங்களை நீங்கள் உற்று நோக்கினீர்களா? அவற்றின் அவல நிலை உமது கண்களுக்குப் புலப்படவில்லையா?

முதலில் உயிர் எழுத்துக்களை உற்றுப்பார். அதில் எழுத்தின ஒற்றுமை உண்டா? ஒரு உயிருக்கு ஈருடல் வரலாமா? இரு எழுத்துக்களை ஓரெழுத்தாகக் கொள்ளலாமா? குறிலொத்த நெடில்கள் அழகாக ஒலிக்கையில், ஈகாரம் நெடிலாக ஒலிக்கிறதே! அது இகரத்தையொத்த வரிவடிலா ஒலிக்கிறது? அந்த ஊகாரத்தின் மேல் “ள” ளகரம் வரலாமா? ளகரத்திற்கு அங்கு வேலை என்ன? “உ” உகரக்குறில் என்கிறோம். ஊகாரத்திற்கு நெடில் இதானே நமக்கு தேவை. ளகரம் உகரத்தை ஆட்கொண்டு ஒலிப்பது முறையா? இப்படி பல கேள்விகள் இன்னும் காத்துக்கொண்டுள்ளது. மார்தட்டும் தமிழனே! தமிழ் அறிஞனே! நேரில் சந்திப்போம்; வாதிப்போம்.

மெய்யெழுத்துக்களை எடுத்துக் கொண்டால் எத்தனை மிதமிஞ்சிய எண்ணிக்கை? இத்தனை எழுத்துச் சுமைகள் தேவைதானா? சற்று சிந்தித்துப் பாருங்கள். தமிழ்த் தாயின் இன்னல்களை போக்க வாருங்கள். தமிழ்மொழியிலுள்ள பல குழப்பங்களுக்குத் தீர்வுகான முயலுங்கள். நம் தாய்மொழியின் மீது சற்று பற்றுக் கொள்ளுங்கள். மொழியுணர்வை தக்கவோர் ஆயுதமாகக் கரமேந்துங்கள். தமிழ் மொழிக்குத் தக்கதோர் சீர்திருத்தம் தாருங்கள். எழுத்தொழுங்கு மற்றும் ஒற்றுமையைக் காட்டுங்கள். தேவையற்ற உபயோகமற்ற வரிவடிவங்களை நீக்குங்கள். மொழி வளர்ச்சசிக்குத் தடையாக உள்ள எழுத்துச் சுமையைக் குறையுங்கள். தமிழ்மொழியை எளிமையாக்குங்கள்.

உலகில் ஏறக்குறைய 2696 மொழிகள் உள்ளன என பேராசிரியர் திரு கா.ஒ. இரத்தினம் அவர்கள் கூறுகிறார். இதில் இரண்டாயிரத்து அய்ந்நூறு மொழிகளுக்கு மேல் சிறுபான்மையாளர்களால் கையாளப்பட்டு வருகிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் இருநூறுதான். நான்கு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகள் இருபதேதான். இந்த இருபது மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனாலும் இந்த இருபது மொழிகளிலும் தொன்மை வாய்ந்த, பழமை நிறைந்த மொழி தமிழே! அனைத்து மொழிகளுமே! புதுப்பிக்கப்பட்ட, சீர்செய்து செப்பனிடப்பட்ட மொழிகள் தான். தமிழ்மொழி ஒன்று மட்டுமே புதுப்பித்து, சீர்செய்து, ஒழங்கு செய்யப்பட்டு, செப்பனிடப்படாமல் முதுமை பெற்ற நிலையிலேயே இருந்து வருகிறது.

ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள், பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டு, சீர்திருத்தங்கள் பல கண்டு இறுதி வரி வடிவங்களை நீக்கி எழுத்துக் குறைப்பு செய்யப்பட்ட மொழிகளே! ஆங்கிலேய பேரறிஞர்கள் அம்மொழியை இருபத்தி ஆறே எழுத்துக்களில் கையாளும் திறனைக் கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் தமிழ் மேதைகளும், பேரறிஞர்களும் தமிழைக் கற்கிறார்கள். தமிழில் பட்டம் பல பெறுகிறார்கள். உலகிலுள்ள அனைத்து தலைப்புகளிலும் ஆய்வினை மேற்கொள்கிறார்கள். அவ்வாய்விற்கு தமிழை உபயோகிக்கிறார்கள். ஆனால் தமிழ்மொழியைப் பற்றியோ! சிந்திக்க எவரும் முன் வரவேயில்லை. நாங்கள் தமிழை கையாளுகின்றோமே தவிர தமிழ் அறிஞர்கள் அல்ல. நாங்கள் உழவர்கள், எங்கள் கடமையை சரிவரச்செய்து வருகிறோம். நீங்கள் ஏன் தமிழ்மொழியின் வரிவடிவங்களை செப்பனிடவில்லை? என் போன்ற கிராம மக்கள் குறை காணும் அளவிற்கு தமிழில் குறைகள் பல உள்ளதே! அக்குறைகள் உங்களுக்குத் தெரியவில்லையா? அக்குறைகளைப் போக்க உங்கள் மனம் விரும்பவில்லையா?

தமிழ்மொழியில், வரிவடிவங்களில் உள்ள அனைத்துக் குறைகளும் உங்கள் ஆய்வில், உங்கள் ஒவ்வோர் படைப்பிலும் இருக்கத்தானே செய்யும். அப்படியானால் குறைகள் உள்ள படைப்புக்கள் தானே உங்கள் படைப்புக்கள் எல்லாம். தவறான படைப்புக்களுக்கும் ஆய்வுகளுக்குமா டாக்டர் பட்டங்கள்! என்ன கொடுமை! கொடுமையிலும் கொடுமை! தமிழ்த்தாயைச் சீர் செய்ய தமிழனுக்கு விருப்பமில்லையா? தமிழ் மொழியைச் சீர்திருத்தம் காண தமிழனால் முடியவில்லையா? இல்லை தமிழனுக்கு திறமையில்லையா? திறமையற்றவனாய் தமிழன் இருக்கமாட்டான். திறமையிருந்தும் செயலாற்ற மறுக்கிறான். காரணம் அவனுடைய மெத்தனப் போக்குகளே!

பெரிய வெட்கக் கேடாக இருக்கிறதே! தமிழ்மொழியைப் பற்றி, தமிழன் அல்லாதவர்களே சிந்தித்துள்ளனர். சீர் செய்து செப்பனிட்டுள்ளனர். கால்டுவெல், வீரமாமுனிவர், அகத்தியர், ஈ.வெ.ரா. பெரியார் இவர்கள் எவருமே தமிழர்கள் அல்ல. ஆனால் நம் தமிழ் மொழியைப் பற்றி சிறிதாவது சிந்தித்துள்ளனர். கால்டுவெல், வீரமாமுனிவர் இருவருமே வெளிநாட்டவர்கள். அகத்தியன் ஓர் ஆரியன். ஈ.வெ.ரா. பெரியார் இவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவர்கள் எல்லாருமே தமிழ்மொழியையும், தமிழ் எழுத்தையும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் ஒரு தமிழனும் துணிந்து எழுத்துச் சீர்திருத்தங்களை செய்ய முன் வரவில்லை. நான் ஓர் உழவன். இருப்பினும் தமிழன். தமிழ் உணர்வுகள் நிறைய உண்டு . தமிழ் மொழியெழுத்துக்களில் குறை காண்கிறேன். குறைபோக்க சீர்திருத்தப் பணியை மேற்கொள்கிறேன்.

தந்தை பெரியார் 1935ஆம் ஆண்டு சனவரி மாதம் 20ஆம் நாள் அன்று (20.1.1935)ல் “தமிழ் எழுத்துக்களைத் திருத்திடடா இளைத்த தமிழனே”! எனக் கூக்குரல் எழுப்பினாரே. அவ்வோசை கேட்கவில்லையா? ஓ தமிழனே! உனக்கேன் 247 எழுத்துக்கள்? என்று தெருத்தெருவாகக் கூக்குரல் போட்டாரே! கடந்த அறுபத்திதெட்டு ஆண்டுகளாக உன் செவியில் நுழையவில்லையா? இதன் பொருள் எழுத்துக்கள் குறைப்புத்தான் என்று நீ உணரவில்லையா?

தமிழ்மொழியில் சீர்திருத்தம் தேவை! இந்த நாள் வரை (2008) எவரும் சீர்திருத்தங்கள் கொண்டு வரவில்லை. தமிழ் மொழியிலுள்ள பிழைகளை, தவறுகளை போக்க எவரும் துணியவில்லை. நான் துணிகிறேன். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கோட்பாட்டில் நுழைகிறேன். சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறேன்.

உயிர் எழுத்துக்கள்  		-		 10
மெய்யெழுத்துக்கள்		-		 14	
உயிர் மெய்யெழுத்துகள்		-		140
						------
						164				
						-------
		

ஆயுதம் எழுத்து அல்ல, அது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்குச் சீர்திருத்தங்கள் அவசியம் தேவை! தேவை!!