தமிழ் எழுத்துக்களின் தோற்றத்தையும் தோற்ற காலத்தையும் திட்ட வட்டமாகக் கூற இயலாது. தமிழ் மொழியின் எழுத்துரு என்று தோன்றியது? என்று மேலிருந்து கீழ்நோக்குவதைவிட, கீழிலிருந்து மேல்நோக்குவது நன்மை பயக்கும். அதாவது தமிழ் மொழியில் என்று புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டதோ அன்று தான் நாம் இன்று காணும் தமிழ் மொழியின் எழுத்துக்கள் இறுதி வரிவடிவம் பெற்றது எனலாம்.

இதற்கு முன் தமிழ் எழுத்துக்களில் வரிவடிவங்கள் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் பற்பல உருமாற்றங்களைக் கண்டு, வரிவடிவங்களப் பெற்று வளர்ச்சியடைந்துள்ளன எனபதைக் கால எழுத்துக்களின் அட்டவணை மூலம் எளிதில் அறியலாம். தமிழ் எழுத்துக்களும் தமிழ்மொழியும் பலகாலக் கட்டங்களைத் தாண்டித் தன் எழில் குறையாமல், நயம் கெடாமல், வீறுநடைப்போடும் மிகச் சிறந்த மொழியாகும்.

குமரிமாந்தனின் பழந்தமிழ்நாடு

அந்நாட்டைக் கண்ணுற்றால் சுமார் (5,00,000) ஐந்து இலட்சம் ஆண்டு காலத்தொன்மையை எடுத்துக்காட்டும். கடல் கோள்களால் நீரில் மூழ்கி அழிவுற்ற மொழியின் வரிவடிவங்களை யார் அறிவார்? நமக்குக் கிட்டியுள்ள வரலாற்றுச் சான்றுகளின் உதவியால், பல உண்மைகளையும், வரலாறுகளையும், மொழியிலக்கணங்களையும் தெரிய முடிகிறது. உலகில் பல மொழிகள் வரிவடிவங்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் நம் திராவிட மொழிகள் தொல் காலத்திலேயே வரிவடிவம் பெற்றுள்ளன என்றால் பெரு மகிழ்ச்சியே! முதன் முதலில் நம் தமிழ் மொழியும் ஒரு “சைகை” மொழி. அதாவது ஊமையர் மொழியாக இருந்ததுதான். பல காலகட்டங்களில் உச்சரிக்கப்பட்டு ஒலிவடிவம் பெறத்தொடங்கியது. இந்த ஒலி மொழியும் பல காலகட்டங்களைத் தாண்டி வரிவடிவம் பெறலாயிற்று. அந்த வரிவடிவம் என்று மலர்ந்ததோ அன்று தான் தமிழ் மொழியின் தோற்றநாள் எனலாம். பழந்தமிழன் தன் மனக்கருத்தை ஓவியமாக்கினான். அவ்வோவியத்தைச் “சித்திர எழுத்து” அல்லது “பட எழுத்து” என்கிறோம்.

மனிதனின் பழங்கால பகுத்தறிவு

அன்றைய மனிதர்கள் பெரும் பகுத்தறிவாளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆடையின்றி அலைந்தவன், மொழியின்றிக் கிடந்தவன், சைகை மொழியைக் கண்டவன், ஒலி மொழி அல்லது பேச்சு மொழியை உருவாக்கியவன், படிப்படியாக வளர்ந்து தன் கருத்தைப் பாறைகளில் பதிவு செய்யத் துவக்கினான், என்றால் அவனை எவ்வாறு பாராட்டுவது? அந்த எழுத்து முறை தான், அவனைப் பழமை வாய்ந்த நாகரிக மனிதனாகப் பாருக்குப் பறைசாற்றுகிறது. நாகரிகத்தை உலகெங்கும் பரப்பிய முதல் மனிதனாகிறான். அந்த நாகரிகம் தான் “ஆற்றுச் சமவெளி” நாகரிகங்கள், மொகஞ்சதாரா, அரப்பா என்னும் நாகரிக நகர் கண்ட, பகுத்தறிவாளன் திராவிடன் அல்லவா!

சிந்துச் சமவெளி நாகரிகம்

மிகப் பழமை வாய்ந்த இந்த நாகரிகத்தை சிந்துச் சமவெளி நாகரிகம் என்கிறோம். இலமுரியா கண்டம் அல்லது குமரிக்கண்டம் அல்லது பழம்பாண்டி நாடு, கடல் கோள்களால் நான்கு முறை வஞ்சிக்கப்பட்டு முழுமையாக அழிவுற்றது. அக்கடல் கோள்களில் தப்பிய மாந்தர்கள் வடக்கே சிந்துச்சமவெளியில் நிலையுண்டு, தொன்மை வாய்ந்த திராவிட நாகரிகமாகிய சிந்துச்சமவெளி நாகரிகத்தைப் படைத்தான் என்பதே உண்மை. மொகஞ்சதாரோ, அரப்பா என்னும் இரு நகரங்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் துறையின் அதிகாரியாகிய திரு. ஆர்.டி. பானர்ஜி, அங்குக் கிட்டிய நாணயங்கள், முத்திரைகள், சுவரின் மீதுள்ள எழுத்துக்கள், பானை ஓடுகளின் மேல் எழுதப்பட்டிருந்த தமிழ்பிராமி எழுத்துக்க் மூலம் இந்நாகரிகம் பற்றிய செய்திகளை வெகு அழகாக விளக்கியுள்ளார். திரு. ஜான் மார்ஷல், திரு. மெக்காய் திரு. மார்ட்டிமர்வீலர் போன்றோர் சுமேரியன் நாகரிகத்தை இத்துடன் ஒத்ததாய்ச் செப்புகின்றனர்.

சிந்துச் சமவெளியில் தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2800 முதல் கி.மு. 1500 வரை

சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் பட்டயங்கள், பானை ஓடுகள் மீது மூல எழுத்துக்கள் என்றும் தமிழ்ப்பிராமியெழுத்துக்களின் மூல எழுத்துக்கள் என்றும் தமிழ்ப்பிராமியெழுத்தென்றும், திரு. இராசுப்பாதிரியார் கூறுகிறார். குமரிக்கண்டத்தைத் தன் தாயகமாக்க் கொண்டிருந்த திராவிடம், நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் அழிந்தான். கலாச்சாரம், வரலாறு, இலக்கியங்கள் அனைத்துமே சேர்ந்து சிதைந்தன.

ஆனால் திராவிடர்கள் முழுமையாக அழிந்துவிடவில்லை ஆசிய கண்டத்தில் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த திராவிடர்கள் ஒருங்கிணைந்தார்கள். மிஞ்சிய மிகச் சிறுபான்மைத் திராவிடர்கள் தம் வாழ்வைப் புதுப்பித்து சமவெளியில் நிலைத்து மற்றுமோர் தாயகத்தை உருவாக்கினர். மொகஞ்சதாரோ, அரப்பா என்னும் இருதலைநகரைத் தன் தாயகதில் உருவாக்கினர்.

ஆரியர் வருகைக்கு முன்பே சுமார் 1500 (ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளியில் ஒரு சிறந்த “நகர நாகரிகம் படைத்தவன் திராவிடனே”! இவனுடைய தாய் மொழியாய்க் கொண்டிருந்தான்; அதுவே தமிழ் வட்டெழுத்து என்பது.

தமிழ் மொழியின் தனித்தன்மை

தமிழ் வட்டெழுத்துக்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தமிழ்ப்பிராமியிலிருந்து பிரிந்து தனித்து வாழத்தலைப்பட்டது. தனித்து வாழ்ந்த தமிழைக் கொண்ட தமிழன், சங்கமைத்து உலகிற்கே ஒளி விள்காய் உயர் நிலையடைந்தான். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த “மெகஸ்தனிஸ்” என்ற கிரேக்கத்தூதுவர் “27 இந்தியா” என்னும் நூலில் தமிழனின் உயர்நிலையைக் கூறுகிறார். இவர் காலம் (கி.மு. 301-296), இதே போல் திரு. பிளினி (கி.பி. 29-73) தாலமிகிளாடியல் (கி.பி. 119-161) போன்றோரும் தமிழரின் உயர்நிலையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்விருகாலக் கல்வெட்டுகள் “பிராமி” எழுத்துக்களால் எழுதப்பட்டவைகள், தனித்து வாழத்தலைப்பட்ட தமிழ், பிராமியிலிருது விலகி “தாமிழி” என்றும் “தமிழி” என்றும் மாற்றலாகி இறுதியில் தமிழ் என மாறியிருக்கலாம்.

இதுவரை நமக்குக் கிட்டிய அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தொல்பொருள் சின்னங்கள், கல்வெட்டுச் சான்றுகள் போன்றவகளின் வாயிலாக்க் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தமிழின்தனித்தன்மையை அறியமுடிகிறது. தமிழ் வட்டெழுத்து முறை சோழ மண்டலம் நீங்கலாக பாண்டிய நாடு, சேர நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளிலும் சிறப்புற்றுது. இவ் வட்டெழுத்து முறையைக் கோலெழுத்து அல்லது மலையாண்மா, என்றும் அழைத்தர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழி வரிவடிவ மாற்றங்களை அட்டவணையில் கண்டு தெரியுங்கள். பழங்காலம் முதல் பலமாற்றங்களைக் கண்ட தமிழ்மொழி 20 ஆம் நூற்றாண்டில் இறுதிச்சீர்திருத்தம் பெற்றது.

“ஒவ்வொரு மனிதனும், தன் தாய் மொழியைத் தன் தாய்ப்பாலாவே கருத வேண்டும். அப்படிக் கருதாதவன் அத்தாய் வயிற்றில் பிறந்தவனாக மாட்டான். தமிழைத் தன் தாய் மொழியாகக் கொண்ட எவனும் தமிழ் மொழியைப்பறுக்கணிக்கமாட்டான்.”

-தந்தைப் பெரியார்.