தமிழ்மொழியில் குறைகள்

19. தமிழ் மொழியில் குறைகள் இருக்கலாமா?

தமிழ் உதிரம் ஊடுருவ, வீரவுடல் சுமக்கும் என்னினமே! கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடிமகனே! ஒலி எழுப்பி, மொழிபடைத்து “தமிழ்” தந்த தலை மகனே!

குமரிமாந்தன் முதல் இன்றைய மனிதன் வரை; முன்னவன் காலம் முதல் இன்னவன் காலம் வரை, எம்மொழியாம் தமிழ் காக்க, அதை வளர்க்க, நிலை நாட்ட எத்தனை பெரும் துயர் கொண்டாயோ! கண்ணீர் விட்டிருப்பாய், உதிரத்தைக் கொட்டியிருப்பாய், எத்தனை எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பாய்! எத்தனை போரினில் வென்றிருப்பாய்! தோல்வியையும் கண்டிருப்பாய்! என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழந்திருப்பாய். நான் உணருகிறேன். பாராட்டுகிறேன் நீ செய்தது சாதனையா! இல்லை போதனையா! உன் திறமையையும், தமிழ் மொழிக்கு நீ ஆற்றிய பெருந்தொண்டையும் மெச்சுகிறேன்.

பலப் பல வசதிகள், வாய்ப்புகள் பெற்றிருந்தும், இந்த 20ஆம் நூற்றாண்டில் உன் திறமையை எட்டிப் பிடிக்கத் தமிழன் எவருமில்லையே என வருந்துகிறேன். நீ எப்படியெல்லாம் சிரம்ப்பட்டு, அல்ல்ல் பட்டு, பெரும் முயற்சியைக் கையாண்டு, தொன்மை வாய்ந்த பழந்தமிழை எமக்குத்தந்தாய். தமிழ் மொழியென்னும் பெரியதோர் வீட்டை படைத்து விட்டாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. அவ்வீட்டை (தமிழ் மொழியை) பழுது பார்க்க, செப்பனிட, சுத்தம் செய்து வண்ணம் பூசி, செம்மைப்படுத்த ஒரு தமிழனும் முன் வரவில்லையே! என வேதனைப்படுகிறேன்.

தமிழ்ப் பாலருந்தி வளர்ந்தவர்கள் எத்தனை கோடி? தமிழ் உதிரத்தை தன்னுடலில் வைத்திருப்பவர்கள் எத்தனை கோடி? ஆனால் தமிழ் மொழியின் இன்னல்களை, தமிழ்மொழியின் எதிரிகளை, தமிழ்மொழியின் இடர்பாடுகளை, குறைகளைப் போக்க எவரும் துணிந்து முன் வராதது ஏன்?.

தமிழில் குறைகள் இருக்கலாமா?

உலக மொழிகளிலே முன்னுதித்த, தொன்மையும் பழமையும் வாய்ந்த நம் தமிழ் மொழியில் குறைகள் இருக்கலாமா? மேல் நோக்கிப் பார்த்தால் குறைகாண இயலாது. சற்று உற்று நோக்குங்கள். நான் தாய்மொழி தமிழை உற்று நோக்கினேன், மற்றும் ஓர் மொழி ஆய்வினை மேற்கொண்டேன். என் தாய்மொழியில் உள்ள பல குறைபாடுகள், தவறுகள், மற்றும் குழப்பங்கள் பல்லாண்டு காலமாகவே இருந்து வருகின்றன என்பதைக் கண்டறிந்தேன்.

1. உயிர் எழுத்துக்களில் மட்டுமுள்ள தவறுகள், குறைகள், முறைகேடுகள்:

1. கால்டுவெல், வீரமாமுனிவர் காலம் முதல் இன்றுவரை கல்விக்கூடங்கள் அனைத்திலுமே ( ஐ – ஔ – ஃ) என்னும் இம்மூன்று எழுத்துக்களைத் தவறாகவே கற்றுத் தருகின்றன.

2. ஒலிக்கு ஒவ்வாத வரி வடிவங்கள் உள்ளன. இருப்பது சரியா?. “ஓ” அகர ஒலி எழுப்புமா? “ஐ” “ஔ” வின் ஒலியை உச்சரித்துப் பாருங்கள்.

3. உயிர்நெடிலெனப் பேரேற்று இரு எழுத்துக்கள் குறிலாக ஒலிக்கும் அவல நிலை இருக்கிறது. அப்படி இருக்கலாமா?

4. ஒரு ஒலியை மீண்டும் ஒலிக்கும் மாற்று வரி வடிவங்கள் உள்ளன. அப்படி இருக்கலாமா? ஒரு ஒலியை ஒரு வரிவடிவம்தானே ஒலிக்க வேண்டும்!

5. குறிலொலி மற்றும் வரிவடிவம் இல்லாது எப்படி நெடில் ஒலிகள் மற்றும் வரிவடிவங்கள் வரமுடியும்? இருக்க முடியும்? குறில்கள் என்னவாயிற்று?

6. வரிவடிவமே இல்லாது எழுத்தெனப் பேரேற்று எவ்வாறு ஒலிக்கலாம்? “ஃ” இது வரிவடிவமா?

7. வார்த்தையை எழுத்தென்று எப்படிக் கூறலாம்? கூறலும் சரியா? “ஊ” “ஔ”

8. குறிலின் ஒலியைத் தழுவும் நெடில்கள், குறிலின் வரிவடிவைத் தழுவாதது ஏன்? குறிலின் வரிவடிவைத் தழுவியே நெடிலின் வரிவடிவம் அமைய வேண்டுமல்லவா!

9. ஒரு எழுத்து இரு வரிவடிவுடன், இரு எழுத்துக்களின் கூட்டொலியை ஒலிக்கலாமா? ஒலிப்பது சரியா? ஓர் உயிர் ஈருடலில் புகலாமா? எப்படி முடியும்? தமிழ் மரபு மீறிய செயல் அல்லவா!.

10. உயிர் எழுத்துக்களில், உயிர்மெய்யெழுத்துக்களின் கலவை எப்படி வரலாம்? கலவையை, தனி உயிராக எப்படிக் கருதலாம்? “ஊ” “ஔ”

11. தனக்கென ஓர் உண்மையான ஒலியே இல்லாது மற்ற எழுத்துக்களின் ஒலியைத் திருடும் அவலநிலை இருக்கலாமா?

II. மெய் மற்றும் உயிர்மெய்களில் குறைகள்

1. ஒரு வரிவடிவின் ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கும் பல வரிவடிவங்கள் இருக்கலாமா? லகரத்தைப் பாருங்கள் “ல”, “ள”, “ழ” என்னும் மூன்று லகரங்கள் உள்ளன. ஓர் ஒலியை மீண்டும் ஒலிக்கும் மாற்று வரிவடிவங்கள் இருக்கலாமா?

2. நகரத்தை எடுத்துக்கொண்டால், அதிலேயும் “ந”, “ண”, “ன”; என்னும் மூன்று னகரங்கள் உள்ளன. இவைகளும் ஓர் ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. அது சரியா?

3. இகர, ஈகார உயிர்மெய்களைப் பார்த்தால் மேல்விலங்குகள் மாட்டப்பட்டு 36 (முப்பத்தாறு ) எழுத்துக்களும் அல்லல்படுகின்றன.

4. ஊகார உயிர்மெய்களை நோக்கினால், நெடில் குறிகள் ஒழுங்கற்று, குறிகளின் இன ஒற்றுமையற்று, நவக்கிரகங்களைப் போல, பல கோணங்களில் பல திசைகள் நோக்கிச் செல்கின்றன. நெடில் குறிகளின் இன ஒழுங்கு காக்கப்படவில்லை.

5. “ஐ” அய்கார “ஔ” அவ்கார உயிர்மெய்களைப் பார்த்தால் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவங்களைப் பெற்று குழப்பங்களையும் அய்யங்களையும் உருவாக்கும் வகையில் மொழி வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன.

6. “ஃ” அக் என்னும் ஆயுதம் ஒரு செத்த பாம்பு. ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவம் மட்டுமல்ல, பயன்படாத பழைய பொருளாகப் பூமிக்குப் பாராமாக உள்ளது.

7. “ஒ” என்னும் ஒகரக்குறில் உயிர்மெய்களைப் பாருங்கள். ஒகரக்குறில் உயிர்மெய்கள் அனைத்திலுமே “கொ” முதல் “னொ” வரை “ர்” துணைக்கால் என்னும் நெடில் குறிகள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் ஒகரக்குறில் உயிர் மெய்கள் நெடிலா? இல்லை குறிலா? குறில் என்று எவ்வாறு ஏற்பது? நெடில் குறிகள் உள்ளதே?

8. இன்னும் உற்றுப்பார்த்தால் பல பல குறைபாடுகள் உள்ளன என்பதனை நீங்களும் உணர்வீர்கள். உயிர்மெய்களில் 50 சதவீதம் தவறுகளும் முறை கேடுகளும் உள்ளன.

எழுத்துச்சுமை

நம் தமிழ் மொழியில் அளவிற்கு அதிகமாக 247 எழுத்துக்கள் உள்ளன. எழுத்துச்சுமை அதிகமாக உள்ளதால் மொழி வளர்ச்சி குன்றும் அபாய நிலையில் உள்ளது. பயன்படாத பல எழுதுக்கள் கண்ணில் வீழ்ந்த தூசியைப் போல் இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

முதலெழுத்துக்கள் 30 என்பது சரியா?

உயிர் – 12, மெய் – 18 ஆக மொத்தம் 30ம் முதல் எழுத்துக்கள் என்கிறார் தொல்காப்பியர். நான் கேட்கிறேன். அதாவது “ங, ண, ழ, ள, ற, ன,” போன்ற ஆறு எழுத்துக்கள் முதல் எழுதுக்களா? முதல் எழுத்தாக வைத்து வார்த்தை அமைக்க முடியாது என்பதையும் முதலெழுத்துக்கள் அல்ல என்பதை உணர்வீர்கள்.

தமிழ்மொழி – செம்மொழியா?

தமிழ் மொழி செம்மொழியா? இல்லை. செம்மைப்படுத்த வேண்டிய மொழி. சீர் செய்ய வேண்டிய மொழி. ஒரு மனிதன் வயதில் முதிர்ந்தவன் என்றால் மட்டும் அவனை ஒழுக்க சீலன் என்று கூறிவிடமுடியாது. அதைப் போலவே ஒரு மொழி, தொன்மை வாய்ந்த பழம்மொழி என்ற ஒரு காரணம் காட்டி செம்மொழி என்று கூறிவிட முடியாது. தங்கத்தை – “தங்கம் 22 கேரட்” என்று கூறுவது இயல்பு. ஆனால் அத் தங்கத்தில் கலவைகள் இருக்கலாம். பிரகாசமாக ஒளிரலாம். அழகாக இருக்கலாம். ஆனால் அத் தங்கத்தை “சொக்கத்தங்கம் 24 கேரட்” சுத்தத் தங்கம் எனக்கூற முடியாது. அதைப் போலவே தமிழையும் “செம்மொழி” எனக் கூறுவது சாத்தியப்படாது. செம்மொழியாக்குவோம்; வாருங்கள்.

முன்னோன் நமக்கு வழங்கிய மொழியே; நமது தாய்மொழி தமிழ். அன்றைய சூழலில், மொழிபடைத்து, வளர்த்துக் காப்பது கடினமான ஒன்றே! இருப்பினும் நமக்கு மொழி தந்தான் என்றால் பாராட்டுக்குரியது. அவன் கொடுத்த மொழியில், நிறை குறைகள் கண்டு செப்பனிடுவது நமது கடமையாகும். ஆகவே தமிழ் மொழியிலுள்ள குறைகளைப் போக்கி நிறையை மட்டும் எடுத்துக் கொள்வோம். அப்பன் வெட்டிய கிணறு உப்பானால் என்ன செய்வது. அக்கிணற்றை மூடிவிட்டு வேறு நல்ல சுவையுள்ள குடிநீர் தேடுவது தான் முறை. இதை விட்டு விட்டு அப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லிக்கொண்டே உப்பு நீரை அருந்துவதும் மடமையே!

“மாறாது” என்ற வார்த்தையின் ஒலி ஒன்றே என்றும் மாறாதது. மற்ற அனைத்துமே மாறக் கூடியது தான்.

-அறிஞர் காரல் மார்க்ஸ்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.

-நன்நூலார்